Sunday, May 23, 2010

பிடித்த 10 தமிழ் படங்கள்

ரொம்ப நாளைக்கு முன்னாடி செந்தில்வேலன் அவர்களால் பிடித்த படங்கள் என்ற தொடர்ப்பதிவிற்கு அழைக்கப்பட்டு இருந்தேன்..இடைவிடாத பணி காரணமாக அப்பொழுது எழுத முடியவில்லை..(நானே சொல்லிகிட்ட தானுண்டு). இப்ப வேற ஏது ஏதோ தொடர்ப்பதிவு எல்லாம் வந்தப்பிறகு இதை நான் எழுதுறேன்.. பிடித்த படங்கள் லிஸ்ட் ரொம்ப பெருசு..அதுவும் பத்து படங்களை மட்டும் வகைப்படுத்துவது ரொம்ப கஷ்டம்..நான் 2000க்கு பிறகு வந்த பத்து படங்களை மட்டும் எழுதுகிறேன்..அதுவும் நியாபகத்தில் உள்ள படங்கள்..


பிடித்த பத்து தமிழ் படங்கள்..


கன்னத்தில் முத்தமிட்டால் (2002)

எத்தனை
முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத படம். கீர்த்தனா, நந்திதாவின் அபார நடிப்பு, கிளைமக்ஸ் காட்சி, சிம்ரனின் மேக்-அப் போடாத முகம், மாதவனின் இயலபான நடிப்பு, ரவியின் ஒளிப்பதிவு, ரெஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள் இவ்வற்றுக்கு மேலாக மணிரத்தினத்தின் இயக்கம்.


எனக்கு படமே பிடிக்கும் இருந்தாலும் மாதவன் சிம்ரனின் காதல் காட்சிகள் கூடுதல் அழகு. மாதவனும் சிம்ரனும் அவரவர் வண்டியை ஒட்டி கொண்டே பேசி கொண்டு வருவார்கள் அந்த ஒரு காட்சி போதும் அது மணிரத்னம் படம் என்று சொல்வதற்கு.அப்புறம் மாதவனின் அக்கா முன்பே இருவரும் காதல் செய்யும் காட்சிகள். நான் படிக்கும் பொழுது காலேஜ் ஆடிடோரியத்தில் இந்த படத்தை ஒளிப்பரப்பினர்கள் இந்த காதல் காட்சிகளுக்கு பெண்கள் பக்கத்தில் இருந்து விசில் பறந்தது..அதவும் சரி பாதி தெலுங்கு பெண்கள்..


மௌனம் பேசியதே (2002)

அழகான படம். சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்ப்பாராத ட்விஸ்ட் நிறைந்த கிளைமக்ஸ் ,சூர்யாவின் நடிப்பு, யுவனின் இசை, அமீரின் இயக்கம் படத்தின் பெரும்பலம். எனக்கு தெரிந்து புதுவையில்(அப்பொழுது) அதிகநாட்கள் ஷூட்டிங் நடந்த படம். வழக்கம்போல் அமீரின் அடாவடி ஆளுமை கொண்ட 'ஹீரோ' படம்..அவரின் முதல் படமும் கூட. காதலை முற்றிலும் வெறுக்கும் கதாநாயகன் காதலில் விழுந்தால் என்ற சாதாரண கதை தான் என்றாலும் சொன்னவிதம் புதுமை+அழகு. இதேமாதிரி முற்றிலும் வன்முறை இல்லாத ஒருப்படம் அமீரிடம் இருந்து மீண்டும் வருமா..?



பிதாமகன் (2003)


சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து பாலா இயக்கிய திரைப்படம். பாலாவின் மூலமே திரையுலகில் மறுபிரவேசம் செய்த இருவரும் இணைந்து அதிரடிப்படுத்திய படம். முரட்டுதனமான நடிப்பில் விக்ரமும், நகைச்சுவையான நடிப்பில் சூர்யாவும் பின்னியிருப்பர்கள். பாலாவிடமும் இதேமாதிரி படங்கள் வருங்காலங்களில் எதிர்ப்பார்க்கிறேன்.


கில்லி (2004)


கில்லியை பற்றி நான் சொல்லி தான் தெரியவேண்டுமா என்ன..மறுநாள் செமஸ்டர் எக்ஸாம்..நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும்..இருந்தாலும் முதல்நாள் இரவு நண்பர்கள் வற்புறுத்த சென்ற படம்..விஜய் படத்துக்கு செல்லும் பொழுதுதெல்லாம் அப்பொழுது 'கடவுளே படம் நல்லாவே இருக்ககூடாது'ன்னு நினைத்துக்கொண்டு தான் செல்வோம்..ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பை பெரும்பாலான படங்கள் சொதப்பிவிடும். இதுவும் அதேபோலவே..இடைவேளையில் எங்கள் நண்பன் வழக்கம்போல் 'என்னாடா படம் இது சொதப்பலா இருக்கு' என்று எங்கள் வழக்கம்போல் சொல்ல அனைவரும் அவனை முறைத்தோம்.

மறுநாள் காலை பயணிக்கும் பொழுது என்னையும் அறியாமல் வாயில் 'அர்ச்சுனரு வில்லு' என்று பாட்டு வர ''ச்சே ..ச்சே..தூ'' என்று துப்பினேன்..இருந்தும் மறுபடியும் பத்து நிமிடம் கழித்து அதே பாடல்..அது தான் கில்லி. விஜயிடம் இருந்து இதேப்போல் மீண்டும் ஒருபடம் ச்சும்மா விர்ரென்று எதிர்ப்பார்க்கிறேன்.


காதல் (2004)

கொஞ்சம் Immature காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிவந்த பிறகு அவர்கள் சந்திக்கும் அப்பொழுதைய கஷ்டமான சூழ்நிலைகளை கண்முன்னே காட்சிகளாய் நகர்த்திய படம். எல்லா பாத்திர படைப்புகளுமே மிக கச்சிதமாக இருந்தது.ஆரம்பக்கட்ட மதுரை காட்சிகள் மிகசுவாரசியம்

( இப்பொழுது வரும் மதுரை படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த படம் தான்னு நினைக்கிறேன்)..கிளைமக்ஸ் மட்டும் கொஞ்சம் சொதபல்ஸ்..பாலாஜி சக்திவேல் என்ன தான் ஆனாரு கல்லூரிக்கு பிறகு..?



தவமாய் தவமிருந்து (2006)


தாயின் அன்பை மட்டும் பிரதானமாக காட்டும் இந்திய சினிமாவில் தந்தையின் அன்பை இயல்பான வலியோடு சொன்ன படம். ராஜ்கிரணுக்கு இந்த ஒருபடம் போதும் அவர் பெயர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும்..பெரிய படம் என்றாலும் சொன்னவிதம், சொல்லிய கதை பல தகப்பன்களின் வாழ்க்கை..நிறையா காட்சிகள் வாழ்வில் ஒவ்வொரு தகப்பன்களும் கடந்து வரும் நிகழ்வை சித்தரித்து இருந்தன..சேரன் இந்த படத்திற்கு பிறகு ரொம்ப தூரம் பாதை மாறி வந்துவிட்டார்..


புதுப்பேட்டை (2006)


இந்தபடத்தை எத்தனை முறை பாத்திருப்பேன் என்று தெரியவில்லை..ஆனால் முழுவதும் அல்ல எதாவது ஒரு இடத்தில ஆரம்பித்து எங்கயாவது நிறுத்துவேன். அப்படிப்பட்ட காட்சியமைப்புகள் கொண்ட படம். நண்பனுக்கே நம்பிக்கை துரோகம், அப்பாவையே நம்பவைத்து போட்டு தள்ளுவது, தொழில் கற்றுக்கொடுத்த குருவை போட்டுதள்ளி விட்டு அந்த இடத்தை பிடிப்பது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு..கதையின் பிரதான பாத்திரம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற அமைப்பை அடியோடு மாற்றிய படம். டிபிக்கல் செல்வராகவன் படம். தனுஷின் நடிப்பில் தி பெஸ்ட்.


சென்னை – 28 (2007)


செம ஜாலியா யாருமே எதிர்ப்பார்க்காத விதத்தில் வந்தப்படம்..வெங்கட்பிரபுக்குள்ள இப்படி ஒரு இயக்குனர் இருக்காரா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தப்படம். சென்னை ஏரியா மட்டுமில்லை கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை வயசுப்பசங்களுக்கும் பொருந்தக்கூடிய கதையமைப்பு..இப்பொழுது போர் அடித்தால்கூட இந்தப்படத்தை போட்டு பார்ப்பேன்..எல்லா காட்சிகளுமே 'ஜாலி திருவிழாவாக' களைக்கட்டும்..சமிபத்தில் வந்த ஜாலியான துள்ளல் படத்தில் இதற்கே முதலிடம்..இதன்ப்பிறகு எதுவும் வந்த மாதிரி நியாபகம் இல்லை.


அஞ்சாதே (2008)


கும்பகோணத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தபொழுது முதன்முறையாக தனியாக சென்று பார்த்தபடம். மிஷ்கின் மேல் இருந்த ஏதோவொரு நம்பிக்கை காரணமாக சென்றேன்..ஒரு அக்ஷன் சினிமா இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று நினைக்கக்கூட இல்லை..படம் பார்த்துவந்து மறுநாள் கூட அதே எண்ணங்களோடு இருந்தேன்..அப்பொழுது வைத்து இருந்த கைப்பேசியின் மூலமாக இணையத்தின் வழியாக தமிழ் விமர்சனம் தேடிக்கண்டு பிடித்து படித்தேன்( அப்பொழுது அது ப்ளாக் என்று தெரியாது) ..கடைசிவரை ஏதோ ஓன்று நடக்கபோகிறது என்றவொரு இறுக்கம் படம் முழுவதுமே பரவி கிடக்கும்..அதுவும் நிறையா காட்சிகள் மிகப்புதுமையாக இருந்தன. மொத்தத்தில் ஒரு கிளாஸ் மூவி.


பசங்க (2009)


தமிழ் சினிமாவில் உண்மையில் பசங்களுக்காக, பசங்களை பற்றிய வந்தப்படம். மிக இயல்பாக எடுத்திருந்தார் டைரக்டர். ஏதாவதொரு காட்சி கண்டிப்பாக நாம் சிறுவர்களாக இருந்தப்பொழுது கடந்துவந்ததாக இருக்கும் . இன்னும் இதுப்போல் நிறையா படங்கள் வரவேண்டும்..அதுவும் அந்த சிறுவர் பட்டாளம் கலக்கி இருக்கும்..நடித்து இருப்பார்கள் என்றே சொல்லமுடியாது.."மழை இன்று வருமா வருமா'' என்ற பாடல் என்னோடைய All time favorite..

Please Do it again Mr.Pandiyaraj..



ரொம்ப நாளைக்கு முன்னாடி ஹாலி பாலாவின் ஏதோ ஒரு பதிவில் பிடித்த பத்து படங்களை எழுத சொல்லி கம்மென்டிருந்தேன்..இப்பொழுது அதே தொடர்ப்பதிவாக ..



தொடர்ந்து எழுத அவரையும் கிஷோரையும் அழைக்கிறேன்..




Tuesday, March 30, 2010

பிரிவுகள்

பிரிவு பல சமயங்களில் மிக கொடுரமான வலியாக இருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல நமக்கு பிரியப்பட்ட சூழலை விட்டு பிரியும்ப்பொழுதுக்கூட அதற்கு சமமான வலியை அனுபவிக்க தான் செய்கிறோம். ஒன்று அதேப்போல் நாம் கடந்து போகவேண்டிய சூழலை வலுக்கட்டயமாக ஏற்றுக்கொள்கிறோம் இல்லை பழக்கப்படுத்தி கொள்கிறோம். போகும் சூழல் நமக்கு பழக்கப்படாத, நம்மில் எளிதில் உள்வாங்க முடியாத சூழலாக இருப்பின், இன்னும் கதை கந்தல் திருவிழாவில் காணாமல்ப்போன குழந்தையைப்போல் மனநிலை எதையோ தேடிக்கொண்டிருக்கும். யாரவது தெரிந்தவர்கள் கண்ணில் படமாட்டார்களா, ஆறுதல் வார்தைகள் கிடைக்காதா என்று கண்ணில் தேக்கிவைத்த கண்ணிறோடு அதுவரை அலைந்துக்கொண்டே தானிருப்போம்..

கிட்டத்தட்ட அதேமாதிரி ஒரு மனநிலையோடு இரண்டொரு நாளாக அலைந்துக்கொண்டிருக்கிறேன்..நான் அமீரகம் வந்து இரண்டு வருடங்களாக தங்கியிருந்த இடத்தை விட்டு வேறு ஒரிடத்திற்க்கு மாறவேண்டிய நிர்பந்தம் மாறியும் விட்டேன்..



ஆனால் ஏதோ மிக நெருங்கிய நண்பனை பிரிந்து வந்து விட்டதைப்போல் ஒருணர்வு நெஞ்சின் மீது சிறுபாரமாய் இருந்து அழுத்திக்கொண்டே இருக்கிறது..அந்த பழைய சூழலின் தாக்கம் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது..அதுவும் புதிய இடத்தின் தனிமை இன்னும் கொடியதாக உணர்கிறேன்..தனிமை சில சமயங்களில் மட்டுமே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்துக்கிறது..பல சமயங்களில் யோசிக்க வைக்கிறது..ஏற்ப்படும் சிந்தனைகள் யாருமில்லாத பொழுதுகளில் இன்னும் என்னை பலவினமாக்குக்கிறது..இருக்கும் சூழலை ஏற்றுக்கொண்டு வாழும் மனிதர்களை பார்க்கும்பொழுது சற்று பயமாகவும், என்னை திரானியற்றவனாகவும் உணர்கிறேன்..

அதுவும் அந்த பழைய இடத்தை விட்டுபிரியும் கடைசி மணிநேரங்களில், இந்தியாவிலிருந்து விடுமுறை கழித்து ஆமீரகம் வந்தப்பொழுது உணர்ந்த அதே அதிர்வுகள்..இத்தனைக்கும் அந்த பழைய சூழலை பலமுறை வெறுத்துள்ளேன்..ஆனால் இன்று அது நினைவுப்படுத்தும் எண்ணங்கள் இனிமையனதாகவே இருக்கின்றது.இதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையோடு ஏற்கனவே வலுக்கட்டயமாக கடந்துவந்த சில சூழலைப்போல் இதையும் கடக்கதான் போகிறேன்.

Sunday, March 7, 2010

திங்கள் இனிதே - 6

இங்கிருக்கும் என் நண்பர் ஒருவர் ஊருக்கு சென்று திரும்பிவந்து விட்டார். அவர் ஊரில் இருக்கும்பொழுது "நான் எதாவது அவரிடம் கொடுத்து அனுப்பட்டுமா, சாப்பிட எதாவது வேணும்னா சொல்லுடா கொடுத்து அனுப்புறேன்.." என்று என்அம்மா போன் பண்ணும் பொழுதெல்லாம் கேட்டுகொண்டே இருந்தார். நான் எப்பொழுதும்போல் "இல்லை ஒன்றும் வேண்டாம், எல்லாமே இங்க கிடைக்குதுமா" என்றே சொல்லிவந்தேன். ஆனால் என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை ஒரு நாள் அப்படி கேக்கும்பொழுது "அம்மா காரக்குழம்பு சாப்பிடனும்போல் இருக்கும் அதுமட்டும் வேண்டுமானால் கொடுத்துஅனுப்புங்கள், ஆனால் அதற்காக நீங்கள் சென்னை வரவேண்டியஅவசியமில்லை யாரவது சென்னை போனால் அவரிடம் கொடுத்து என் நண்பரிடம் கொடுக்க சொல்லிவிடுங்கள்'' என்றேன்.

ஆனால்
என் அம்மாவே புதுவைலிருந்து சென்னை ஏர்போர்ட் வரை வந்து அவரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.புதுவை திரும்பிய கையோடு வேலைக்கு வேறு செல்லவேண்டும்.இது தெரிந்து தான் நான் 'அப்பவே' வேணாம்னு சொன்னேன். நான் என்னத்த சொல்லுறது..!! நான் ஊரில் இருந்தால் இதற்கெல்லாம்அவசியமே இல்லை.

(''ஏன்டா டேய், இவ்வளோ பேசுற நீ ஊர்ல போய் வேலை பார்க்க வேண்டியதுதானே, அதை விட்டுட்டு அம்மா பிளைட்ல குழம்பு கொடுத்து அனுப்புனாங்க, ஆயா கப்பல்ல ரசம் கொடுத்து அனுப்புனாங்கன்னு சொல்றியேன்னு "..நீங்க சொல்லுறது கேக்குது மக்களே, அதற்கான முயற்சிகளும் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன்).
....................................................................................................................

ஹாக்கி
உலககோப்பை இந்தியாவில் நடக்கும்ப்பொழுதே, இந்திய அணியால்'அரையிறுதிக்கு' கூட முன்னேற முடியவில்லை. இங்கிலாந்து முதல் ஆளாக அரையிறுதிக்கு தகுதிபெற்று விட்டது.(அது தான் கோப்பையை தட்டிசெல்லும் என்று நினைக்கிறேன்).வீராவசேமாக பாகிஸ்தானை வீழ்த்தியோதோடு நாமும் வீழ்ந்து விட்டோம். சொல்லிவைத்தார் போல் அதற்கடுத்து மோதிய ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகளிடம் 2-5 , இங்கிலாந்துடன் 3-2 என்ற கணக்கில் தோற்றோம். அணியில் பிரச்சனையா, ஹாக்கி சங்கத்தில் பிரச்சனைகளை களைய வேண்டுமா, அரசாங்கம் நம் தேசிய விளையாட்டின் மீது 'தீவிர' கவனம் செலுத்த வேண்டுமா, இல்லை 'நம்' அணுகுமுறை மாற வேண்டுமா?!. என்ன ஆனா என்ன அடுத்து ஐபிஎல் வரப்போகிறது, அதில் கவனத்தை செலுத்துவோம்.
.....................................................................................................................

அடுத்து நம்ம 'நித்தி'யை பற்றி பார்ப்போம். ’வீடியோ’ சுமார்னு கூட சொல்லமுடியாது.
ரொம்ப மோசம். சன் டீவி பண்ணது அதுக்கு மேல மோசம்.

பொதுவாகவே நமக்கு இந்த 'ஒழுக்க கட்டுப்பாடுகளில்' இருந்து மீறி 'தப்பை' செய்வதில் ஆர்வம் இருக்கும், ஆனால் சமூக கட்டுப்பாடுகள் காரணமாக அடக்கியே வாசிப்போம். அதையும் மீறி யாராவது செய்தால் அதை 'தெரிந்துகொள்வதில்' ஒரு ஆர்வம் காட்டுவோம்(கிட்டதட்ட தினசரியில் 'கள்ளக்காதலை' பற்றி படிக்கும் விஷயத்தில் இருக்கும் ஆர்வம்). அதுவும் 'சாமியார்' என்கின்ற பட்சத்தில் அவருக்கு நாம் வகுத்திருக்கும் 'ஒழுக்க விதிமுறைகள்' இன்னும் அதிகம். சாமியாரே அவருடுய இந்த 'விதிகளை' மீறுகின்ற பொழுது நம்ம பண்ணுறது எல்லாம் ஒரு 'மேட்டரே' இல்லை என்கின்ற அல்ப சந்தோஷம் ஒருப்புறம்.

ஸோ,'மேட்டர்' என்னனா தனிமனித ஒழுக்கங்களும், விதிகளும் தான். அது எந்த மதத்தை சேர்ந்த 'பெரிய மனிதர்களாக' இருந்தாலும் சரி.ஆனா எப்ப எவன் மாட்டுவான்னு காத்திருந்து 'அந்த மதத்தை' தூற்றுவது சின்னபிள்ளத்தனம். அதுவும் நம் பதிவுலக 'அதிமேதாவிகள்' இந்த விஷயத்தில் காட்டும் அக்கறை அவர்கள் குடும்பத்தில் கூட காட்டமாட்டார்கள்.
....................................................................................................................

ஷார்ஜாவை பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் பொறாமை தான்.நிறையா தமிழ் மக்கள், தமிழ்ப்படங்கள் ரீலிஸாகும் தியேட்டர்கள்,அப்புறம் அமீரகத்தின் பிரபல பதிவர்கள் எல்லாம் அங்கே தான் இருக்கின்றனர் முக்கியமா 'தமிழ்' உணவகங்கள். நான் இருக்கும் ஊரில்(அல்-அய்ன்) ஒரு உருப்படியான உணவகம் கூடயில்லை.ஷார்ஜாவில் எங்கு போகினும் நல்ல உணவு கிடைக்கின்றது.ஊரில் இருக்கும்ப்பொழுது 'சாப்பாடு' எல்லாம் எனக்கொரு பொருட்டே இல்லாமல் இருந்தது ஆனால் இங்கு வந்து சிலசமயம் மனது அதை எதிர்ப்பார்கின்றது. சரி, அதையும் மீறி சிலசமயம் நானே சமைத்துப்பார்க்கலாம் என்று 'ரிஸ்க்' எடுத்தாலும் அதன்ப்பிறகு எந்த சாப்பாட்டை பார்த்தாலும் கொஞ்சநாட்களுக்கு ஒருவித 'பீதியா' தான் இருக்கு.
..........................................................................................................................

வேலை வேலை வேலை..இந்த ரெண்டு மாசமா இப்படி தான் போகுது. இரவு வீடு திரும்பி ப்ளாக்ல எதாச்சும் கிறுக்கலாம்னு பார்த்தாலும் ''இந்த ரணக்களத்துலயும்ஒரு கிளுகிளுப்பான்னு'' மனசாட்சி கேக்குது..இன்னும் முடிக்கவேண்டிய பணிகள் நிறையா இருக்கு.பார்ப்போம் வரும் மாதங்கள் எப்படி அமைக்கிறது என்று.
...........................................................................................................................

தல cool down and get relaxed for some minutes ..உங்களின் இனிமையான சில நினைவுகளை மீட்க ஒரு அருமையான பாட்டை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பாட்டை பாருங்கள் நினைவுகளை 'மீட்க' முடியாவிட்டால் நான் பொறுப்பல்ல..எத்தனையோ பாட்டு இருக்கறப்ப 'இந்த பாட்டு' மட்டும் எதுக்கு!! பாருங்க உங்களுக்கே தெரியும்.




Sunday, February 21, 2010

டீன்-ஏஜ்

வணக்கம்..முதலில் என்னை இந்த தொடர்ப்பதிவுக்கு அழைத்த சூர்யாவுக்கு கோடானுக்கோடி வணக்கங்கள்..சூரியன் இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது..அதுப்போல தான் இந்த 'ஆதவன்' இல்லாத பதிவுலகத்தை கற்பனைக்கூட செய்துப்பார்க்க இயலவில்லை..பதிவுலகத்தின் முதல் வெளிச்சம் நமது 'ஆதவன்'..சிலப்பதிகாரத்தில் கூட சூரியனை பற்றி 'ஏதோ' சொல்லியுள்ளார்கள்.அது என்னானு அடுத்தப்பதிவில் சொல்கிறேன்..

சூர்யாவின் மேல் இருக்கும் மரியாதையின், அன்பின்ப்பால் இந்த தொடர்பதிவை தொடர்கிறேன்..பட்..இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்தி கொள்கிறேன்..தொடர்ப்பதிவில் கலந்துக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயங்கள்..ஆனால் சிலப்பேர் கட்டாயப்படுத்தி எழுதச்சொல்கிறார்கள்..எழுதமுடியாமல் போனால் கொஞ்சநாள் கழித்து 'பின்னூட்டம்' மூலமாகவோ 'அல்லது' தொலைப்பேசி மூலமாகவோ மிரட்டுகிறார்கள். அதையே காரணம்க்காட்டி நமது 'பதிவுலகு' பற்றை 'கேள்விக்குறியாக்கி' வேடிக்கை பார்கின்றனர்..இதற்கு யாரவது 'பெரிய மனிதர்கள்' முடிவு கட்டினால் நன்றாககிருக்கும்..ப்ளீஸ்..we are tired.

Let us move to our topic..

ஒரு 15 வயசு இருக்கும்

"டேய் இது அவுட் இல்லடா..சொன்னா கேக்கமாட்டிங்கலே 96 நாட்அவுட் செஞ்சுரி அடிச்சப்பிறகு நானே பேட்டை வச்சிட்டு போயிறேன்டா..சின்னபசங்க கூட இதுக்குதான் விளையாடக்கூடாது..போடுற போடுற போடா.." ..நான்.

"இதான் லாஸ்ட் சான்ஸ் இதுக்கப்புறம் பேட்டை கொடுக்கல..நாளையிலருந்து தயவுசெஞ்சு எங்ககூட விளையாட வராத..போய் உன் வயசு பசங்களோட விளையாடுப்போ.."..என் தம்பி.

"டேய் உங்க அண்ணன் சரியா ஓசி காஃச்சி அடிக்கறான்டா..நாமலே பாக்ஸ் போட்டு விளையாடுறோம்..இதுலயும் ஆறு தடவை அவுட்டாகி செஞ்சுரி போடுறான்..அவனுக்கு கொஞ்சம்கூட வெட்கமே இருக்காதா.." என் தம்பியின் நண்பன்.

இதையெல்லாம் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் 'செஞ்சுரியை' நோக்கி வேகமாக பயணப்பட்டு கொண்டிருப்பேன்.

17 வயசுல

"டேய்..உன் கிளாஸ்ல இருக்குற ஃ பிகர்ங்க பேரெல்லாம் சொல்லு"..சீனியர்.

"அண்ணன் அது எப்படி அண்ணன் நான் போய்..எல்லாம் சிஸ்டர்ஸ் மாதிரின.."

''டேய் மச்சான்..ஃ பிகர்ங்க பேரை சொல்லுரவன கூட நம்பிடலாம்..இதமாதிரி பசங்க சரியான மொள்ளமாரியா இருப்பானுங்க இவன விடாத"..இன்னொரு சீனியர்.

"டேய் சொன்னா இந்த இடத்தை விட்டு போகலாம்..இல்லை சாயங்காலம் வரைக்கும் இங்க தான் நிக்கணும் என்ன சொல்லுற.."..சீனியர் .

"அது ஒரு ஆறு, ஏழு பேரு இருக்காங்க..'க..தா', 'ப்..யா' அப்புறம் 'ஜெ..ந்தி'..".

"இன்னமோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அக்கா தங்கச்சின்னு டயலாக் எல்லாம் விட்ட..இன்னிமே உன்னை இந்த ஏரியாலையே பார்க்கக்கூடாது ஓடிபோடா.." ..சீனியர்.

18 வயசு இருக்கும்னு நினைக்கிறேன் !!

'மச்சான்..அந்த அண்ணன் ரொம்ப வேண்டப்பட்டவர்டா..நான் போய் எப்படிடா அவர்கிட்டப்போய் கேட்ப்பேன்..'..குமார்.

'டேய்..நீ கேக்கிறியா இல்லை உன் பெயரை சொல்லி நான் போய் கேட்கவா'..நான்.

'டேய்..நல்லா யோசிச்சியா
'அந்த பொருளோட' விலை வேற எழுபது ருபாய்..'.குமார்.

'மச்சான்..உன் ஷேர் வேணாலும் நான் தரேன்..இந்த விஷயத்தில் நான் காம்பிரமைஸ் பண்ணிக்க தயாரில்லை..நான் இன்னிக்கு பார்த்தே தீரனும்..இந்த சந்தர்ப்பத்தை விட்ட வேற சந்தர்ப்பம் கிடைக்காது ..ரகு வீட்டுல எல்லோரும் நாளைக்கு வந்துடுவாங்க சொல்லிட்டேன்..இன்னிக்கே பார்த்தா தான் உண்டு.." ..நான்.

--------------------------------------------------------------------------------
13 to 19 'டீன்-ஏஜ்' அனுபவங்கள், நல்லவேளை அதுக்குமேல தான் பல அழிச்சாட்டியங்கள் நான் ஆரம்பிச்சது..அது வரைக்கும் 'எதையும்' வெளிப்படையா சொன்னதோ இல்லை செஞ்சதோ இல்லை..'டீன்'ல பெரும்பாலும் கழிந்தது பள்ளிக்கூட மற்றும் டிப்ளோமா அனுபவங்கள்,புதுவையில். அதன்பின் 'படித்தது' 'சுத்துனது' எல்லாம் வெளியூரில் தான்..

படிப்பு, கிரிக்கெட் மிஞ்சிப்போனா தியேட்டர், பீச் இப்படியே போனது 'டீன்' முழுவதும்..தைரியமா ஒரு பெண்ணை 'சைட்' கூட அடித்ததில்லை..அப்புறம் எங்கிருந்து பேசியிருப்பேன்..சின்ன சின்ன தப்புகள் பண்ணியிருந்தால் கூட எல்லாவற்றையும் மீறி ஒரு 'குழந்தைத்தனம்' எப்பொழுதும் ஒட்டிக்கொண்டு இருக்கும் அந்த வயதில் நம் அனைவருக்கும்.அந்த நினைவுகளை நினைக்கும்ப்பொழுது இப்பொழுதும் இனம்புரியாத சந்தோஷம் நம்மை சூழ்ந்துக்கொள்கிறது.

ஆனால் அதை அனுபவிக்கும் காலத்தில் 'ஜஸ்ட் லைக் தட்' அதை கடந்துவந்து விடுகிறோம் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே..என்ன பண்றது யாராச்சும் ஒரு டைம் மெஷின் செஞ்சு கொடுந்திங்கனா நல்லாயிருக்கும்.

மேலும் இந்த தொடர்ப்பதிவுக்கு கிஷோர் மற்றும் விஜய் இவர்கள் இருவரையும் அழைக்கிறேன்.


Wednesday, February 3, 2010

தண்டனை காலங்கள்

இந்த பெருமழை எதையும் கரைக்கும் வல்லமை பெற்றதாக இருப்பின் என்னுள் நான் கரைத்துவைத்து இருக்கும் பாவத்தை அடியோடு கரைத்துவிட நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.

வெகுநேரம் அடித்து சாய்க்கும் பேய் மழையில் நனைந்துக்கொண்டு இருந்தேன்..மழையோடு சேர்ந்துக்கொண்டு என்னை வாட்டி வதைக்கும் சிந்தனைகளும் சிதறிக்கொண்டு இருந்தது..எனையறியாமல் கடவுளை கூப்பிடுகிறேன்..செய்த பாவத்துக்கு மனமாற அவனிடம் மண்டியிட்டு கதறியழுகிறேன்..கொஞ்சம் ஆறுதல் கிடைப்பதைப்போல் இருந்தாலும் மறுப்படியும் பாவசிந்தனைகள் வலுப்பெறுகின்றன..

உண்மையில் கடவுள் இருந்திருந்தால் என்னை அந்த காரியத்தை செய்ய வைத்திருப்பானா, நான் செய்த தப்புக்காக இத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தப்பின்னும், 'இல்லை, நீ மனம்மாற அனுபவிக்க வேண்டிய தண்டனை இதுவல்ல..சிறையை விட்டு வெளியேப்போ இதை விட பெரிய தண்டனையை உலகம் உனக்கு கொடுக்கும்' என்று ஆண்டவன் முன்னாடியே தீர்மானித்து வைத்திருப்பான்போல்..இந்த இடத்தில தான் ஒருவனை இந்தளவு வதைக்கும் கடவுளின் இருப்பின்மேல் இன்னும் சந்தேகம் வலுக்கிறது..சிந்தனைகள் மறுப்படியும் பின்னோக்கி நகர்கின்றன..

வயலுக்கு வரப்பு வெட்டுவதில் ஆரம்பித்தது 'அவனுடுனான' என்னுடுய பிரச்னை..நாளொரு வண்ணமாக பலரூபத்தில் விஸ்வரூபம் எடுத்து என்னில் இருந்த வன்மத்தை இன்னும் ஆழமாக வேர்ப்பிடித்து வளர செய்திருந்தது. எல்லாத்துக்கும் மேலாக மோட்டார் ரூமிற்கு திருட்டு மின்சாரம் எடுத்த விஷயத்தில் கையும் களவுமாக பிடிபட்டப்பொழுது..அவன் தான் அதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றிய எண்ணங்கள்..மூளையின் ஒவ்வொரு செல்லிலும் அவன் மீதான குரோதத்தை படிய செய்திருந்தது..மேலும் கூட்டாளிகள் போதையின் உச்சத்தில் எரிந்துக்கொண்டிருந்த நெருப்பை இன்னும் ஊதி பெருதாக்கி இருந்தார்கள்..எப்பொழுது வயலுக்கு மறுப்படியும் போனேன் என்றுக்கூட நினைவில்லை..அனால் அவன் தலையை என் மம்பட்டி பிளந்துது மட்டும் நினைவிருக்கிறது..போலீஸ் பிடித்தது..கோர்ட்..ஆயுள்..சிறை..இதோ கொஞ்ச நாட்களுக்கு முன் விடுவித்து வெளியே வந்தும் விட்டேன்..

மரண தண்டனையே கொடுத்திருக்கலாம் இப்பொழுதுப்படும் என் வேதனையை விட என்று நினைக்க ஆரம்பித்து சில நாட்கள் முடிந்துவிட்டன..ஒரு விடுதலையான கைதியை சமூகம் பார்க்கும் பார்வையை சிறையிலிருக்கும் பொழுதே ஓரளவு யூகித்து வைத்திருந்தேன்..ஆனால் குடும்பத்திலிருந்தே முற்றிலுமாக நிரகரிக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.பெற்றோர்கள் என்னைபெற்ற பாவத்தை என்றோ மரணத்தை தழுவி போக்கிகொண்டனர்.இருப்பவன் தம்பி மட்டுமே,அவன் மட்டும் என்ன விதிவிலக்கா, என் தம்பியின் சிறு வயது மகன் கூட என்னை 'கொலைக்காரனாக' தான் அறிந்து உள்ளான்..

நான் சமுகத்தின் பார்வையில் தண்டனையை அனுபவித்து வந்தப்பின் கூட குற்றவாளியாக தான் தெரிகிறேன் என்ற வலியை விட..'அவனி'ன் குடும்பத்தின் இன்றைய நிலைமை எனக்கும் ஏற்ப்படுத்தும் வலி தான் என்னை நிலைகுலைய செய்தது..

அன்று ஓரளவு நன்றாக இருந்த குடும்பம்..இன்று சிதைந்துப்போய் உள்ளது..அவனின் பெண் தையல் வேலைக்கு போவதும், ஊதாரியான பையன் ஊரை சுற்றி வருவதும் அவர்களின் வறுமையை பறைசாற்றியது..அவன் மனைவி வீட்டினுள் முடங்கி போயிருக்ககூடும்.

அன்றுகூட நான் தெருவில் நடந்துபோய் கொண்டு இருக்கையில் அவனிடம் ஒரு பெரியவர் 'உங்க குடும்பம் சீரழிஞ்சதுக்கு காரணமே இவன் தான்'..என்று என்னை கைகாட்டியது அவன் வன்மத்தை மேலும் வளர்த்திருக்கும்..அந்த வன்மமே என்னை அவனிடம் ஒரு உதவிக்கு கூட நெருங்க விடாது என்பதை நான் நன்கு அறிவேன்..இந்த சிந்தனை தான் நான் செய்தது தப்பு என்பதை தாண்டி ''மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்'' என்பதை மறுப்படியும் மறுப்படியும் எனக்கு உணர்த்திகொண்டு இருந்தது.

ஆறுதல் சொல்ல நண்பர்கள் கூட இல்லாத இந்த இரவில் மழையோடு சேர்ந்து நானும் அழுதுக்கொண்டு இருக்கிறேன்..நடுமண்டையில் விழுந்த அடி சிந்தனையை கலைத்து இருந்தது..திரும்பவதற்குள் மின்னல் கழுத்துக்குள் இறங்குவதைப்போல் சுளிரென்று ஒரு வெட்டு..ரத்தம் வழிந்தோடும் என் பார்வையில் மங்கலான உருவத்தில் 'அவனின்' மகன் இன்னும் ரெண்டு பேரோடு அவன் பகையை தீர்த்து கொண்டிருந்தான்..சாவை நோக்கி வெகு வேகமாக விரைந்துக்கொண்டு இருந்தேன்..'நாளை இதேப்போல் நீயும் குற்றத்தை உணரும் ஒரு தருணம் வந்தால்'..என்று நினைத்தபொழுது எனக்கு அவன் மேல் பரிதாபமே வந்தது..



இருந்தும் ஒன்றை உணர்ந்தேன்..எல்லா
மரணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன வாழ்க்கை என்னும் நரகத்தில் இருந்து விடுப்பட.எனக்கு பாவ விமோசனம் தந்த 'ரட்சகன்' அவனின் மகன்..கடவுள் இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.