ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு..
விரிவுரையாளனாக மாறிய பிறகு கொஞ்சம் கோபப்பட ஆரம்பித்து விட்டேன் இல்லை மாற்றப்பட்டு விட்டேன். கல்லூரி எளிதாக என் மனநிலையை மாற்றி விட்டது. பல ஆசிரியர்களுக்கே உரிய அந்த சர்வதிக்காரப்போக்கு என்னையும் பிடித்துவிட்டது (வினோத்து நீ 'யூத்து'டா ஒரு யூத்தோட பீலிங்க்ஸ் இன்னொரு யூத்துக்கு தான் தெரியும் என்று மனசு சொன்னாலும்). அவங்க பண்ணுகின்ற சின்ன சின்ன காரியங்கள் கூட என்னை நம்பியார் போல பாவிக்க வைக்கின்றன (உ.ம்) ஒரு பெண் மாணவர்களை கடந்து செல்லும்பொழுது அவர்கள் எதாவது சிரித்து பேசினால் கூட அவர்களை முறைத்து பார்க்கிறேன். பசங்க அப்படி தான் இருப்பாங்க என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது.சிம்பிள் லாஜிக், கல்லூரியில் புதிதாக சேரும் மாணவன் ''யப்பா, தப்பிச்சோம்டா ஸ்கூல் லைப்லிருந்து இனி ஜாலி தான்'' என்கின்ற மனநிலையோடு தான் வருகின்றான். தப்பிதவறி அவர்கள் அடியெடுத்து வைக்கும் காலேஜ் ஒரு முதன்மை கல்லூரியாக இருந்தால் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மாணவர்களை ''ஏன்டா இந்த காலேஜ்க்கு வந்தோமென்று'' யோசிக்க வைத்து விடுகின்றது. அவ்வளவு கெடுபிடிகள், கட்டுப்பாடுகள். எல்லாமே ரிசல்ட் என்னும் மாய மோகினிக்காக. அதனால் அவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் எங்களை போன்ற ஆசிரியர்களையும் ஒரு கட்டத்தில் அடக்கிவிடுகிறது. அந்த கட்டுப்பாடுகளே என்னை போன்றவர்களையும் மாற்றி விடுகிறது. அதுவும் முன்பு இருந்தது போல இல்லாமல் பசங்களுக்கு வெளியுலக விஷயங்களும், தொடர்புகளும் குறுகி போய்விட்டன. வீட்டுக்கு போனால் மொபைல், FB இவை இரண்டும் போதும். கல்லூரியில் படிப்பின் வழியாக திணிக்கப்படும் அழுத்தம், அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் தொழில்நுட்பத்தின் மூலம் திணித்து கொள்கிறார்கள். பாவம் பசங்க.
புதுச்சேரி..