Thursday, May 28, 2009

தடுமாறும் பயணங்கள்..

சுரேஷும் கிஷோரும் திண்டிவனம் பேருந்து நிலையத்தில் மிதமாக குளிரும் பனியில் காலையில் ஆறு மணிக்கே நின்று கொண்டு இருந்தனர்..

"அப்ப இன்னிக்கு சொல்லிடறதா முடிவு பண்ணிட்ட"..சுரேஷ்.

"ஆமாம்டா நிச்சயமா அதுல எந்த வித சந்தேகமும் வேணாம் உனக்கு.."..கிஷோர்.

"டேய்..நம்ம காலேஜ்ல அத்தனை பொண்ணுங்க இருக்கு..அதுங்க மேல எல்லாம் இல்லமா இப்படி பஸ்ல போறப்ப வரப்ப இன்ட்ரோ ஆனா பொண்ணு கூட எப்படிடா.."

"மச்சான் அது தாண்டா லவ்ஸ்..எங்க வேனாலும் எப்படி வேனாலும் வரலாம்.."

"உன் விஷயத்துல இன்னொரு வரி கூட சேத்துக்கலாம், எத்தனை முறை வேணாலும் வரலாம்னு ரொம்ப பொருத்தமா இருக்கும்.."..சுரேஷ்.

"டேய், கொஞ்சம் மூடுறியா, நடக்க போறதா மட்டும் பாரு"..கிஷோர்.



ரெட்டனை பஸ் ஆடி அசைந்து வந்து நின்றது..அதில் இருந்து இறங்கி அன்ன நடை போட்டு வந்த பிரியா இவர்களை பார்த்தவுடன் ஹாய் என்று கை காட்டினாள்..

"மச்சான் பார்த்தியா பாக்குற பார்வையே ஆயிரம் அர்த்தம் சொல்லுது.."..கிஷோர்.

"ஆயிரம் அர்த்தம் எல்லாம் இல்ல, ஒரே அர்த்தம் தான் இன்னிக்கும் வந்துடான லூசு பய அப்படின்னு பாக்குது.."..சுரேஷ்.

மூவரும் சேர்ந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறினார்..பஸ்சில் கூட்டம் அள்ளியது..காலியாக இருந்த ஒரு இடத்தை காட்டி ப்ரியாவை அமரும் படி நடத்துனர் சைகை காட்டினர்..

ப்ரியாவும் சென்று அமர்ந்தாள்..

"பார்த்தியாடா உலகத்தை அவள விட அதிக நேரம் நின்னுக்கிட்டு போக போறோம் ஆனா இந்த கண்டக்டர் அவள கூப்பிடு உக்கார சொல்றாரு..ஏன் நம்மக்கு மட்டும் ஆண்டவன் காலை இரும்புலையா படைச்சி இருக்கான்.."..சுரேஷ்.

"விடுறா பொம்பளை பசங்க உக்காந்துக்கிட்டு வரட்டும் தப்பு இல்ல.."..கிஷோர்.

டீவியில் வடிவேல் காமெடி ஓடி கொண்டு இருந்தது..

" மச்சான் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ இருக்குற கூட்டம் எல்லாம் தெள்ளார் கற்பகம் காலேஜ் வந்ததும் இறங்கிடும் அதுல இருந்து அடுத்து இருபத்து நிமிடம் வந்தவாசி போய் சேர்கிற வரைக்கும் உன் டைமிங், சரியா சொல்லிடு சொதப்பிடாத"..

"தம்பிகளா ரொம்ப நேரமா கூப்பிடிறேன் உயிரை வாங்கமா டிக்கெட்டா வாங்கி தொலைங்க"..கண்டக்டர்..

"நல்லா குத்தலத்தல நிக்க வேண்டியது எல்லாம் இங்க வந்து நின்னுக்கிட்டு நம்ம உசுர வாங்குதுங்க.."..டீவியில் வடிவேல் கத்தி கொண்டு இருந்தார்..

இருவரும் டிக்கெட்டை வாங்கினர்..வண்டி தெள்ளார் வந்தவுடன் கூட்டம் எல்லாம் இறங்க ஆரம்பித்தது..

கிஷோர் கொஞ்சம் நடுக்கத்துடன்.."மச்சான் சொல்லலங்க்ரியா, அவ தப்பா எடுத்துக்க மாட்டாளே, அனாவசியமா தப்பா போய்ட போகுது..".

"நீ புடுங்கறது பூராவுமே தேவை இல்லாதது தான் போய் புடுங்கு போ.."..டீவியில் வடிவேல்.

"டேய், சாவடிச்சிருவன்..ஒழுங்கா போய் சொல்லுற..அப்புறம் காலேஜ் வந்துட்டு என் உசிர வாங்குவ.."..சுரேஷ்..

கிஷோரும் தைரியத்தை வரவழைத்து கொண்டு ..அவள் அருகில் போய் அமர்ந்து சுற்றி வளைக்காமல் "நான் உன்ன லவ் பண்ணுறேன் பிரியா"..அப்படின்னு மெதுவான குரலில் தைரியமாக சொல்லி முடித்தான்..

அடுத்த கணமே.."கிஷோர் நான் உங்கள இன்னமோ நினைச்சேன்..நீங்க இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துப்பிங்கனு நினைக்குல சாரி எனக்கு உங்கள பிடிக்கில இதுவே உங்களை சந்திப்பது கடைசி தடவையா இருக்கட்டும்.." என்று பொட்டில் அறைந்தது போல் சொல்லிவிட்டு வந்தவாசி பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் இறங்கி நடந்து சென்றாள்..

சுரேஷ் கிஷோரிடம் .."மச்சான் பீல் பண்ணாத பார்துக்குலம் விடு.."

"டேய், பீல் பண்ணல என்ன பேசிட்டேன்னு ரொம்ப ஓவரா பேசிட்டு போற அவ..அதன் வேற ஒன்னும் இல்லை.."..

"சரி என்ன முடிவு பண்ணி இருக்க.."..சுரேஷ்..

"இதுக்கு அப்புறம் இவ பின்னாடி வர்றது சுத்த வேஸ்ட்..இந்த பஸ் இன்றே கடைசி..காலேஜ்ல அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் வீணா இருக்குல..இனிமே அதான் முடிவு பண்ணிட்டேன்.."..கிஷோர்.

"டேய்..உடனே முடிவ மாட்டிடா.."..சுரேஷ்..

"மச்சான் உருகு உருகுனு உருகருது எல்லாம் அந்த காலம் ஒன்னு சரி பட்டு வரலியா சரி தான்னு போய்கிட்டே இருக்கணும்..இனிமே இவ்வள நினைக்கிறது கூட வேஸ்ட்..சரி வா காஞ்சிபுரம் பஸ் நிக்குது ஏறலாம்..

வழியில் பிரியா தன் மொபைலில் கணேஷுடன் "டேய், உன் கூட கார்த்திக் கூட பழகுற மாதிரி ஒரு பையன் கூட எதர்த்தமா பழகினேன் பார்த்த இன்னிக்கு ப்ரொப்ஸ் பண்ணுறான்.."..

கணேஷ்.."அப்படியா சொன்னான்.."

பிரியா.." ஆமா செல்லம், இந்த பசங்க சாதரணமா பேசுனா கூட தப்பா எடுத்துக்கிரனுங்க.."

காஞ்சிபுரம் செல்லும் பஸ்சில் சுரேஷ் நீண்ட சிந்தனையில் வந்து கொண்டு இருந்தான்."நம்ம நினைச்ச மாதிரியே பிரியா ஒத்துக்கில..இன்னும் ரெண்டே வாரத்துல அவள எப்படியாச்சும் நம்ம ப்ரொபோஸ் பண்ணி கவுத்திடனும்..அடுத்த வாரமே அடிய போட்டுட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டே
கிஷோர் கூட சிரித்து பேசிக்கொண்டு வந்தான்..


Wednesday, May 27, 2009

வினோத்கெளதம்..இதான்..இம்புட்டு தான்..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெற்றோர் வைக்க வேண்டும் என்று நினைத்த பெயர் வினோத்..

என் அம்மாவுக்கு புத்தர் என்றால் விருப்பம் ஆதலால் வினோத்கெளதம் என்று சேர்த்து வைத்து விட்டார்கள்..சில பேருக்கு வினோத் என்றும் சில பேருக்கு கெளதம் என்றும் தான் தெரியும் சிலர்க்கு தான் முழுப்பெயர் தெரியும்..எனக்கு பிடித்த பெயர் தான்..என்ன பேருக்கு ஏற்ற போதி மரம் இன்று வரை கிடைக்கவில்லை..

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கடைசியாக ரொம்ப அழுதது என் போன பிறந்த நாள் அன்று ..!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

சில
சமயம் ரொம்ப பிடிக்கும்.. சில சமயம் என்னடா இது கையெழுத்து வர வர இவ்வளவு மோசமாக இருக்கின்றதே என்று நினைத்து கொள்வேன்..
ஆனால் கல்லூரி சமயங்களில் வேறு எதற்கு பாராட்டு வாங்கி இருக்கிறேனோ இல்லையோ என் கையெழுத்துக்காக நிறைய முறை பாராட்டப்பட்டு இருக்கிறேன்..

4).பிடித்த மதிய உணவு என்ன?

பிடித்த மதிய உணவு என்று ஒன்றும் இல்லை..ஏன் என்றால் இப்பொழுது எல்லாம் எது கிடைக்கிதோ அதை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..

ஆனால் வீட்டு சாப்பாட்டை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்..குறிப்பாக என் அம்மாவின் சமையல்..அவர்களே சில சமயம் கேட்பார்கள் "ஏண்டா ரசத்துல உப்பே போடுல எப்படி ஒன்னும் சொல்லாம சாப்டுரன்னு..நம்மோட சாப்பட்டு ஆர்வம் அவ்வளவு தான்..

இருந்தாலும் சைனீஸ் புட்ஸ் கொஞ்சம் பிடிக்கும்..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சமயங்களையும் சந்தர்பங்களையும் பொறுத்து..இங்கு அமிரகம் வந்து ஒரு நல்ல நட்புக்காக ஏங்கிய நாட்கள் அதிகம்..ஆனா ஒருவன் நண்பன் என்று முடிவு எடுத்து விட்டால்..நான் தான் தளபதி, கர்ணன் எல்லாமே..(கொஞ்சம் ஓவரா இருக்கோ)..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே பிடித்தமானது தான்..அருவி குளியல் ரொம்ப பிடிக்கும்..கடைசியாக அருவியில் குளித்தது மங்கி பால்ஸ், ஆழியார்.அப்புறம் திற்பரப்பு அருவியில் ஒரு தடவை நாங்கள் குடும்பத்துடன் சென்ற பொழுது யாருமே இல்லாத அருவில் தனியாக ரொம்ப நேரம் குளித்தோம்..மறக்க முடியாத அனுபவம்..

கடலில் கடைசியா துபாய் ஜுமைரா பீச்ல குளித்தேன் சுளீர் என்று அடிக்கும் வெயிலில்...ச்சும்மா சொல்ல கூடாது அழகான பீச்..


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்டிப்பாக கண்கள் தான்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: தன்னம்பிக்கை., அவ்வளவு எளிதில் கோபம் வராது.

பிடிக்காத விஷயம் :பயங்கரமான சோம்பேறி..யாராச்சும் உலகின் மிக சிறந்த சோம்பேறிகள் போட்டி வைத்தார்கள் என்றால் கண்டிப்பாக முதல் பத்து இடங்களில் வந்து விடுவேன்..

அப்புறம் சில பழைய கசப்பான நினைவுகளை இன்று வரை மறக்காமல் நியாபகம் வைத்து உள்ளது..:((

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?பிடித்தவிசயம்?

இது வரை அப்படி யாரும் இல்லை ஆனால் எதிர்பார்ப்புகள் உண்டு..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

My fAMiLy and My fRIenDs கொஞ்சம் இல்லை ரொம்ப நிறையா மிஸ் பண்ணுறேன்..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஒரு வெள்ளை கலர் ஷார்ட்ஸ் அப்புறம் சாம்பல் கலர் டி-ஷர்ட்..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டிங் டாங் கோவில் மணி..ஜி படத்தில் இருந்து..

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வானத்தின் நீலம்..

14.பிடித்த மணம்?

புதுவையில் அடிக்கடி ஆரோ அஷ்ரமின் ஊதுப்பத்தி நிலையத்திற்கு செல்வேன் அங்கே எல்லாம் கலந்து கட்டி ஒரு மணம் வரும் பாருங்கள் அப்படியே ஆளை தூக்கும்..
புதுவை வந்தால் போய் பாருங்கள் ரங்கபிள்ளை தெரு கடைசியில் ..

அப்புறம் சின்ன வயதில் பெட்ரோல் மணம் பிடிக்கும்..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிஷோர்: முற்போக்குவாதி, பின் நவினத்துவ எழுத்தாளர்..சமகால சே..

சத்தியமாக இது எல்லாம் என்னவென்று அவனுக்கு தெரியாது ..எனக்கும் தான்..ஆனா எல்லோரும் ரசிக்கும்படி எழுதுறான்..

ஷன்முகப்ரியன் சார்..:

இவருக்கு அறிமுகம் தேவை இல்லை.இயக்குனர்...நிஜமாகவே பிரமிக்க வைக்கும் எழுத்து நடை..
பலரும் ரசிக்கும்படி எழுத கூடியவர்..

கண்ணா: நம்மை போல் புதியவர்..அமிரக வாசி..அற்புதமான கவிதைகளுக்கு சொந்தக்காரர்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சகோதரி சக்தியின்
கவிதைகள் எல்லாமே கருத்து ஆழம் மிக்கவை..சில சமயம் நான் ரெண்டு தடவை படித்த பின் தான் புரியும்..

உனக்கான ராஜபாட்டையில் நீ நட சொல்லலாம்..ஆனால் உண்மையில் எல்லாமே பிடிக்கும்..

அவர் சிறுகதை ஏரியாவில் கூட சிக்ஸர் அடிக்க முயற்சி செய்யலாம் ஆனால் கவிதை மட்டுமே எழுதுகிறார்..


17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், ஹாக்கி அப்புறம் கேரம்..

18.கண்ணாடி அணிபவரா?

இது வரை இல்லை..ஆனால் இதே மாதிரியே கணினியை உற்று பார்த்தப்படி உக்கார்ந்து இருந்தால் கூடிய விரைவில் அணிய வேண்டிய நிலைமை வரும்..

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதுக்கு மிகவும் நெருக்கமான படங்கள்..

இப்ப சமிபத்தில் வெண்ணிலா கபடி குழு, அபியும் நானும், ராமன் தேடிய சீதை..
பார்த்தேன் நன்றாக தான் இருந்தது..

அப்புறம் டில்லி-6 பார்த்தேன் அதுவும் ok.

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஊரில் அடிக்கடி திரையரங்கு சென்று விடுவேன்..ஆனால் இங்கு வாய்ப்பு இல்லை கடைசியாக திரை அரங்கில் பார்த்த படம் அயன்..

21.பிடித்த பருவ காலம் எது?

புதுவையில் நான் அனுபவித்த ஒவ்வொரு மழைக்காலமும் மற்றும் பனிக்காலங்களும்..
மறக்கமுடியாத அனுபவம் எப்பொழுது பேய் மழை அடித்தாலும் ஊரில் இருந்தால் பைக்கை எடுத்துக்கொண்டு பீச் சென்று விடுவேன்..
மழைக்காலத்தில் ஆர்பரிக்கும் கடல் அலைகள் வாய்ப்பே இல்லை..அதுவும் புதுவை பீச் மழைக்காலத்தில் சான்சே இல்லை போங்க..


22. படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இப்பொழுது எதுவும் இல்லை நண்பர் கிருஷ்ணாவிடம் சில புத்தங்கங்கள் பரிந்துரைக்க சொன்னேன்..அவரும் சொல்லி இருக்கிறார் வாங்க வேண்டும்..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி கிடையாது எப்பொழுதாவது..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : மழலை சத்தம்..
பிடிக்காத சப்தம்:ஓவர் உதார் சப்தம்..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்பொழுது இருக்கும் அமிரகம்..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சத்தியமாக எதுவும் இல்லை..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல்..

எத்தனை முறை போனாலும் சலிக்கவே சலிக்காத ஊர்..
ஒரு அமானுஷ்ய அழகு எல்லா இடத்திலும் ஒளிந்து கொண்டு இருக்கும்..
யாராவது பதிவர் கொடைக்கானல்ல இருக்கிங்களா..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்தவரை மற்றவர்களை இம்சை படுத்தாமல்...

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இப்ப எதுவும் இல்லை..கல்யாணம் ஆச்சுனா அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.. :)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....

Monday, May 25, 2009

குங்குமத்திற்கு நன்றிகள் பல..

குங்குமத்திற்கு நன்றிகள் பல..


என்ன சொல்றது வேற என்ன இருக்கு ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் காலி அப்படின்னு தான் சொல்ல தோணுது..

என்னோட ப்ளாக்ல நான் எழுதிய "சில பார்வைகள் சில பருவங்கள்" என்ற கட்டுரை இந்த வார குங்குமத்தில் வெளியாகி இருக்கு..

கோடானு கோடி நன்றிகள் குங்குமத்திற்கு இந்த பிரசுரத்தை வெளியிட்டு இந்த துரும்பையும் அடையாளப்படுத்தி காட்டியதற்கு..அதுவும் தமிழின் முன்னனி இதழ்களில் ஓன்று என்னுடுய இந்த பிரசுரம் நினைத்து பார்க்க முடியாத ஓன்று..

நம் பதிவர்கள் மேலும் குங்குமம் போன்ற புகழ் பெற்ற இதழ்களின் பார்வை இருக்கிறது என்பதற்கு ஒரு சான்றே இது..

என்னை போலவே இன்னும் பல புது பதிவர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை..

ஆனா பாருங்க சனி என் ப்ளாக் வாசலில் உக்கார்ந்து கொண்டே இவ்வளவு நாள் சேக்ஸ் வாசித்து கொண்டு இருந்து இருக்கிறது N-Tamil வடிவில்..

சரியாக இது போல் ஒரு அடையாளம் கிடைத்து இதன் முலம் கிடைக்கும் அறிமுகத்திற்கு வைத்தது ஆப்பு..

ப்ளாக் வைரஸ் பிரச்சனைகளால் காணமல் போய்விட்டது..போய்டுச்சு அவ்வளவு தான் நான் எவ்வளவு முயற்சிகள் எடுத்து விட்டேன் கிடைப்பது போல் தெரியவில்லை..

இருந்தாலும் குங்குமம்திற்கு நன்றிகள் பல..

முதலில் தெரியப்படுத்திய நண்பர் திரு. கே. ரவிஷங்கர் அவர்களுக்கும் நன்றி..
என்னுடன் சேர்ந்து குங்குமத்தில் வந்த பிரியமுடன் வசந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

மற்றும் தொலைந்து போன பின்பும் என்னை ஊக்கப்படுத்தி பின் தொடரும் நண்பர்களுக்கு நன்றிகள்..

இது என்னுடுய தொலைந்து போன ப்ளாக்..

http://vinothgowtham.blogspot.com

குங்குமத்தில் பிரசுரித்த கட்டுரை..

http://vinoth-gowtham.blogspot.com/2009/05/blog-post_7086.html

குங்குமம் லிங்க்..
http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/24

http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/25

http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/26

http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/27

Thursday, May 21, 2009

இந்த பிரபலங்கள் எல்லாம் பதிவர்களா இருந்தா..

சில பிரபலங்கள் நம்மை போல பதிவர்களாக இருந்தால் என் கேள்விக்கு எப்படி பதில் அளிப்பார்கள்:

முதலில் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித்:

நான்: தல நீங்க பிரபல பதிவரா இருந்தாலும் உங்களின் சில பதிவுகள் பயங்கர மொக்கையா இருக்கே..அதுக்கு காரணம் என்ன..?

அஜித்: சரித்திரத்தை ஒரு முறை திருப்பி பாருங்க இன்னிக்கு சூப்பர் பதிவர்னு பேர் எடுத்தவங்க எல்லாம் ஒரு காலத்துல மொக்கை பதிவு போட்டவங்க தான்..


நான்: அப்புறம் நீங்க விரும்பி படிக்கும் பதிவர் யாராச்சும் இருக்காங்கள..

அஜித்: ம்ம்..ஒருத்தர் இருக்காரு பேரு வினோத்கெளதம்..அமெரிக்க அதிபர் ஒபாமாவே அவரோட ப்ளாக் பால்லோவார்..ஆனா பாருங்க துரதிர்ஷ்டவசமா அவரோடைய ப்ளாக் காணாம போய்டுச்சு..

நான் மனதுக்குள்: அது உங்களுக்கு தான் துரதிர்ஷ்டம் மத்தவங்க எல்லாம் ரொம்ப பாக்கியம் பண்ணி இருக்கோம்..


அப்புறம் நம்ம இளைய தளபதி விஜய்:

நான்: உங்களோடயோ பல பதிவுகள ஒரே மாதிரி இருக்குன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே அத பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க..

விஜய்: ன்னா..இங்க பாருங்கன்னா எனக்கு என்ன வருதோ அத தான்னா நான் எழுதறேன்..மத்தபடி என் வாசகர்களும் அத தான்னா விரும்புறாங்க..எதுக்கு தேவை இல்லமா ரிஸ்க் எடுக்கணும்ன்னா..

நான்: நீங்களே புதுசா ஒரு திரட்டி ஆரம்பிச்சு அதுக்கு தலைவரா வேற ஆகா போறிங்கன்னு ஒரு விஷயம் பலமா அடிப்படுதே..இது உங்களுக்கு தேவையா..

விஜய்: ன்னா..இது என் விருப்பம் இல்லனா..என் வாசகர்கள் விரும்புறாங்க..அதுக்கு அப்புறம் என் டாடி..நல்லவேளை இந்த கேள்வி அவரு இல்லாதப்ப கேட்டிங்க இல்லனா நீங்க பலமா அடிப்பட்டு இருப்பிங்க..

அப்புறம் நம்ம ராமநாதபுரம் எம்.பி அண்ணன் ரித்தீஷ் அவர்கள்..

நான்: வாழ்த்துக்கள் தெலுங்குமணம் ஸ்டார் ஆனதற்கு..

ரித்தீஷ்: தம்பி முதல்ல வாழ்த்து சொல்றிங்க இந்தாங்க புடிங்க ஐந்நூறு ரூபா..

நான்: அது இருக்கட்டும், உங்க பதிவுக்கு பால்லோவர் எல்லாம் குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து கூப்பிட்டு வரிங்கன்னு ஒரு புரளி இருக்கே அது வேற இல்லமா நீங்களே அனானியா மாத்தி மாத்தி வந்து உங்கள புகழ்ந்து கம்மென்ட் போட்டுக்ரிங்க அப்படினும் ஒரு பேச்சு இருக்கே உண்மையா..

ரித்தீஷ்: அட வேலை வெட்டி இல்லாத பரதேசி பசங்க அப்படி தான் தம்பி பேசிக்கிட்டு திரிவானுங்க..நான் எல்லாம் பிறவி எழுத்தாளன் தெரியும்ல..

நான்: அப்ப நான் கிளம்புறேன் அண்ணே..

அடுத்து நம்ம சுப்ரமணிய சாமி..

நான்: நீங்க ஏன் எப்ப பாத்தாலும் சூப்பர் பதிவர்களா பார்த்து எப்பொழுதும் குற்றம் சொல்லுரிங்க..

சுப்பு: நோக்கு ஒன்னும் தெரியாது அம்பி..நேத்து தான் கிளிண்டன் கூட பேசினேன்..அவர் என்கிட்டே இருக்குற ஆதரங்கள் எல்லாம் கேட்டு இருக்காரு..நீ வேன்னா பாரு இந்த புஷ் பயல் கம்பி என்ன போறான்..அப்புறம் இந்த பதிவர் கிஷோர்க்கும் பின்லேடன்க்கும் உள்ள தொடர்பு ரகசிய டேப் எனக்கிட்ட இருக்கு..நம்ம பதிவர் ஜும்பலக்கடி பம்பாவோட சுவிஸ் அக்கௌன்ட் டீடைல் எல்லாம் இப்ப என்கிட்டே தான் இருக்கு..இந்த பான்-கீ-முன் என்ன பெரிய யோக்கியசீலனா அவனோட வண்டவாளம் நாளைக்கு தண்டவாளம் ஏறுதா இல்லையானு பாரு..

அடுத்து நம்ம மருத்துவர் அய்யா ராமதாசு..

நான்: சமிபத்துல நீங்க எழுதுன பதிவுக்கு யாருமே வரலனும், வழக்கம் வர்ற மூணு நாலு பேரு கூட எட்டிப்பாக்குல அப்படின்னு ஒரு பேச்சு இருக்கே..

ராமதாசு: தம்பி அது நான் வழக்கம் போல் எழுதின பதிவு தான் ஆனா பாருங்க இடையுல இந்த இங்க்தளிஷ் அப்புறம் தெலுங்குமணம் இவங்க இரண்டு பேரும் வேற யாரு பேச்சையோ கேட்டுகிட்டு பண்ண தில்லலங்கடி பித்தலாட்டம் தான் இந்த அளவுக்கு ஆனதுக்கு காரணம் ஆனா வாழ்க்கை வட்டம் தம்பி அத நியாபகம் வச்சுக்குங்க..

அடுத்து நம்ம தங்கர்பச்சன்:

நான்: மற்ற பதிவர்கள் பற்றி நீங்க என்ன நினைக்கறிங்க..

தங்கர்:
என்னங்க நடக்குது இங்க..ஆள் ஆளுக்கு பதிவு எழுதுறேன்னு கூத்து அடிக்கறாங்க..இல்ல நீங்களே சொல்லுங்க என்ன மாதிரி இங்க எவனாச்சும் ஒருத்தனாவது எழுதுறானா..
நான் கஷ்டப்பட்டு பதிவு எழுதுறேன்..எவ்வளவு நேர்மையானது எனது படைப்பு அதுக்கு ஒருத்தனும் வரமாட்டன்கிரன்..எவனாச்சும் மசாலா தடவி பதிவு எழுதுனா அவன் பின்னாடி கும்பல் கும்பலா ஓடுறானுங்க..
தமிழர்கள் எல்லாம் சோற்றால் அடித்த பிண்டம் ஆகிடங்க தம்பி..

வெல்..ம்ம்..அடுத்து நம்ம உலக நாயகன் கமல்..:

நான்: சார் நீங்க பதிவு எழுத வரலைனா என்னவா ஆகி இருப்பிங்க..

கமல்: ம்ம்..நான் எழுதிய எனது படைப்பு கூறும் எனது இலக்கிய பயணம்..ஜெயகாந்தன் கூட அதன் சொன்னாரு..அவரோடைய பார்வை வேறு..ஒரு சாமனியனா வேறு ஒரு பார்வையில் நிச்சயம் என்னால் ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் தான இது என்பது கேள்விக்குறி..பல நகரங்கள் சுற்றி திரிந்தாலும் நான் ஒரு கிராமத்தான் எனபதால் என்னால் நிச்சயாமாக அந்த கோணத்திலும் பார்க்க முடியும்..எனக்கு ஜல்லிக்கட்டு பிடிக்கும்..நான் அந்த காளையை அடக்கும் வீரனாக கூட வேலை பார்த்து கொண்டு இருக்கலாம்..

கமல் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே பக்கத்தில் இருந்த அவர் நண்பரிடம்.."அங்க ஒருத்தரு தலை தெறிக்க ஓடுறாரே யாரு அவரு.."

அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த:

நான்: நீங்க ரொம்ப நாளா சொந்தமா ஒரு திரட்டி ஆரம்பிக்க போறிங்கன்னு ஒரு பேச்சு இருக்கே..??

ரஜினி: கண்ணா ஆரம்பிக்கனும் ஆனா கட்டாயம் ஆரம்பிக்கணுமா..ஆரம்பிக்க வேண்டிய நேரத்துல அதுக்கான கட்டாயம் இருந்து வர வேண்டிய இடத்தில இருந்து கட்டளையும் வந்துச்சுனா..ஆரம்பிச்சிருலாம்..

நான்: தலைவா இதே டயலாக் தான் பதினைந்து வருடமா பேசுறிங்க..

ரஜினி: ஹா..ஹா.ஹா..கண்ணா நமக்கு இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு இல்ல எப்பொழுதும் ஒரே பேச்சு தான்..நீ இன்னும் பத்து வருஷம் கழிச்சு இந்த கேள்விய கேட்டாலும் இதே பதில் தான்..


Tuesday, May 19, 2009

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சதி செயல்..

என்னவென்று சொல்வேன்..

இந்த விஷயத்தை அரைகுறையாக கேள்விப்பட்ட பொழுதே சற்று அஜ்ஜாக்கிரதையாக இருந்து விட்டேன்..

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜெய்த்து அவர்களின் ஆட்சி அமையும் முன்பே அவர்களின் சர்வாதிகார போக்கை தொடங்கி விட்டனர்..

இதில் ஏற்கனவே நான் கூறியது போல இந்திய உளவுதுறையின் போக்கு என்னை சற்றே சந்தேகத்தில் ஆழ்த்தியது..

நாளை கருணாநிதி டில்லி பயணம் என்ற பொழுதே நான் உஷாராக இருந்திருக்க வேண்டும்..

இப்பொழுது வருத்தப்பட்டு என்ன பயன்..

இவர்களின் வரப்போகின்ற ஐந்து ஆண்டுக்கால கொடுங்க்கோல் ஆட்சிக்கு இதுவொரு சான்று..

இனிமேல் வருத்தப்பட்டு என்ன பயன்..

என்னுடுய காணமல் போன ப்ளாக் திருப்பி வந்து விட போகிறதா..

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் சதிவேலை இது என்பதை நான் நன்கு அறிவேன்..

என்னால் எழுத முடியாமல் போனால் என்ன வாய் இருக்கு பேசிக்கொண்டு தான் இருப்பேன்..

எப்பா இதுக்கு மேல என்னால மொக்கை போட முடியாது..

இன்னிக்கு காலையில் இருந்து என் ப்ளாக்கை( வினோத்கெளதம் ) காணவில்லை..தேடி கண்டுப்பிடித்து கொடுப்பவர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..

இல்லை என்றால் நான் எழுதுவதை பற்றி மறு பரிசிலனை செய்யப்படும்..

( எப்பா இவன் ஆயுசு முழுக்க இவன் ப்ளாக் இவனுக்கு கிடைக்ககூடாது என்று நினைப்பிர்கள் என்று தெரியும் )..

அதுவரை ஒரு பிரேக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..

இதுவரை என்னை படித்த மற்றும் தொடர்ந்த நல உள்ளங்களுக்கு நன்றி நன்றி.

இப்படிக்கு வருத்தங்களுடன்..

வினோத் கெளதம்..