Tuesday, September 15, 2009

பீலிங்க்ஸ் ஆஃ ப் இந்தியா..

போன வாரம் செவ்வாய்க்கிழமை காலையில் எழுந்து இருக்கும் பொழுது மனம் முழுவதும் ஒரு வெறுமை குடிக்கொண்டு இருந்தது..இன்னிக்கு மறுபடியும் ஊருக்கு(துபாய்) இல்லை ஜெயிலுக்கு செல்ல போகிறோம் என்ற உணர்வே என்னை எதிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறடித்து கொண்டு இருந்தது..மணித்துளிகளை எண்ண ஆரம்பித்து இருந்தேன்..

என் அம்மா வேறு "வினோத் கோவிலுக்கு சென்று விட்டு வந்து விடலாம்" என்று சொன்னப்பொழுது இன்னும் "பக்" என்று உணர்தேன்..கோவிலுக்குபோனா இன்னும் நேரம் விரயம் ஆகுமே என்று எண்ணிக்கொண்டே கிளம்பினேன்..வண்டியில் செல்லும் பொழுது சாதரணமாக ரோட்டில் சிரித்து பேசிக்கொண்டு செல்பவர்களை பார்க்கும் பொழுது இன்னும் ஆத்திரமாக வந்தது.."எல்லாம் இன்னையோட போச்சே" என்று எனது ஆழ்மனம் அலறியது..மணக்குள விநாயகர் கோவிலையும், வேதபுரிஸ்வரர் கோவிலையும் அன்று வித்தியாசமான மன சிந்தனையோடு பார்த்தேன்..

திரும்பி வீட்டுக்கு வந்து சாப்பிடும் பொழுது என் அம்மா சாப்பாடு பார்த்து பார்த்து உபசரித்த விதம் வேறு இன்னும் எரிச்சலை தான் ஊட்டியது..உண்மையில் பரோலில் வந்த "ஜெயில் கைதி"மறுபடியும் ஜெயிலுக்கு போவதை போல் என் கண்ணோட்டத்தில் இருந்தது வீட்டில் இருந்த அனைவரின் பேச்சும் உபசரிப்பும்..

ஒரு வழியாக வீட்டில் இருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்து எல்லோரிடமும் சொல்லி விட்டு கிளம்பினேன்..வழி அனுப்ப என் பெற்றோர் அப்புறம் சில உறவினர் வந்தனர்..வண்டியில் செல்லும் பொழுது நான் ஒரு மாதமாக விரும்பி கேட்ட சில பாடல்கள் அன்று கேட்ட பொழுது என் அழுகையை தூண்டும் விதமாக இருந்தது..என் அப்பா என் மனநிலையை அறிந்துக்கொண்டு என் "மூடை" மாற்றும் விதமாக சினிமாவை பற்றி "அஞ்சாதே. மிஷ்கின், wednesday , உன்னை போல் ஒருவன்" என்று பேசிக்கொண்டு வந்தார்..என் அப்பாவின் சினிமா அறிவும், இலக்கிய அறிவும் எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தும்..நானும் கூட சேர்ந்து உரையாடுவேன்(சினிமா டாபிக் மட்டும்)..ஆனால் அன்று "உம்" மட்டுமே கொட்டிக்கொண்டு வந்தேன்..

மனம் முழுவதும் சில கேள்விகள் திருப்பி போய் தான் ஆக வேண்டுமா..இங்கேயே வேலை தேடிக்கொள்ளலாமே போன்ற சிந்தனைகள் மறுப்படியும் ஆக்கிரமிக்க தொடங்கின..ஆனால் அதே எண்ணத்தை நண்பர்களிடமும், சில உறவினர்களிடமும் வெளிப்படுத்திய பொழுது அவர்கள் சொன்ன பதில்கள் என்னை அந்த எண்ணத்தை யோசிக்க செய்து இருந்தது.."ஐயோ வினோத் மறுபடியும் இங்க வேலை செய்யபோறியா வேணாம்டா வாழ்கையே போச்சு" என்கிற ரீதியில் தான் இருந்தது பெரும்பாலனவர்களின் பதில்கள்.."யே நீ படிச்சு இருக்க இங்கயே நல்ல வேலை கிடைக்கும்" என்று பதில் சொன்னவர்கள் ஒருவர் இல்லை இருவர்..

ஏர்போர்ட் உள்ளே நுழையும் பொழுது அங்கே பணிப்புரியும் அப்பாவின் நண்பர் நின்று கொண்டு இருந்தார்..அவர் வேறு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றும் விதமாக "என் பொண்ணு போன வாரம் தான் அவள் தோழிகளோடு நயாகரா நீர்வீழ்ச்சி சென்று விட்டு வந்தால்" என்று கனடாவில் பணிப்புரியும் அவர் பெண்ணை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்.."பெண் பிள்ளைகளே தேசம் கடந்து வேலை செய்கிறார்கள் ஆண் பிள்ளைகளுக்கு என்ன என்கிற ரீதியில் இருந்தது அவர் பேச்சு..அவருக்கு என்ன தெரியும் என் "பீலிங்க்ஸ்" என்று நினைத்துக்கொண்டேன்..

கடைசியாக கிளம்பும்ப்பொழுது அம்மாவின் முகத்தை ஒரு சில நிமிடங்கள் உற்று பார்த்துவிட்டு கிளம்பினேன்..இன்னும் கொஞ்சம் நேரம் பார்த்து இருந்தால் "ஓ"வென்று அழுது இருப்பேன் என்று மட்டும் தெரியும்..கடவுளே அடுத்த ஜென்மத்திலாவது என் முடிவுகளை நானே எடுத்துக்கொள்ளும்படியான தீர்க்கமான சிந்தனையை கொடு என்று விமானத்திற்கு காத்து இருந்தேன் சில மணி நேரங்களாவது போதையின் பிடியில் எண்ணங்களை சிதறடிக்க..

(டிஸ்கி: எதையும் யோசிக்காமல் வந்த என்னை சில மணிநேரங்கள் துபாய் விமான நிலையத்தில் காத்து இருந்த துபாய் பேருந்து நிலையத்தில் "ட்ராப்" செய்து அந்த நேரத்தில் "சில" உதவிகளும் செய்த சுந்தர்ராமன் சார்க்கு மனமார்ந்த நன்றிகளை சொல்ல இந்த நேரத்தில் கடமைப்பட்டு உள்ளேன்.."ரொம்ப நன்றி சார்"..)

((டிஸ்கி 2: ஏழு கழுதை வயசாகுது இன்னும் என்னடா "Home sick" என்று கூட சில பேர் கேக்கலாம் என்ன பன்னுறதுங்க எல்லாரோட எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இருப்பதில்லை "அவங்க அவங்க பீலிங்க்ஸ் அவங்களுக்கு".))